×

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது


அம்பத்தூர்: நேபாளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி நிர்மலாதேவி (34). சென்னை திருமங்கலத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் தங்கி, காவலாளியாக வேலை செய்து வந்தனர். கடந்த மாதம் 4ம் தேதி, நிர்மலா வீட்டு வாசலில் அமர்ந்து செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், நிர்மலாதேவியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். நிர்மலாதேவி, தண்ணீர் எடுத்து வர, வீட்டின் உள்ளே சென்றபோது, பின்தொடர்ந்து வீட்டினுள் நுழைந்த அந்த வாலிபர், திடீரென நிர்மலாதேவி வாயை பொத்தி, அவர் அணிந்திருந்த தங்கத்தாலி, வளையல் ஆகியவற்றை பறிக்க முயன்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலாதேவி திருடன்… திருடன்… என அலறிக் கூச்சலிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் நிர்மலாதேவியை தாக்கினார். நிர்மலாதேவியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதை அறிந்த வாலிபர், பைக்கில் ஏறி தப்பிச் சென்றார். இதுகுறித்து நிர்மலாதேவி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அதே கட்டிடத்தின் முதல்மாடியில் உள்ள ஒருவருக்கு உணவு டெலிவரி செய்துவிட்டு கீழே வரும்போது நிர்மலாதேவியிடம் நகைகள் பறிக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு, பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியரான சைதாப்பேட்டையை சேர்ந்த முகமது அலிகான் (22) என்பவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் நகை பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnan ,Nepal ,Nirmala Devi ,Tirumangalam, Chennai ,Nirmala ,
× RELATED சுப்பையார் குளத்தில் மூழ்கி கேரள வாலிபர் பலி